Saturday 4 May 2013

அருள்மிகு தில்லை காளி திருக்கோயில்


திருவிழா:
   
  நவராத்திரி இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  
   
தல சிறப்பு:
   
  பிரம்மனை போல் நான்கு முகத்துடன் தில்லை காளி தனி சன்னதியில் அருளுகிறாள். பிரகாரத்தில், நின்ற கோலத்தில் "வீணை வித்யாம்பிகை' என்ற பெயரில் சரஸ்வதியும், தெட்சிணாமூர்த்தி பெண் உருவத்தில் "கடம்பவன தக்ஷண ரூபிணி' என்ற பெயரிலும் அருளுகிறார்கள். கல்வியில் சிறந்து விளங்க வியாழக்கிழமைகளில் இவர்களுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்கிறார்கள். தெட்சிணாமூர்த்தியை பெண் வடிவில் இங்கு மட்டுமே தரிசிக்க முடியும்.  
   
திறக்கும் நேரம்:
   
  காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 4.30 முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.  
   
முகவரி:
   
  அருள்மிகு தில்லை காளி திருக்கோயில், சிதம்பரம் - 608 001, கடலூர் மாவட்டம்.  
   
போன்:
   
  +91- 4144 - 230 251  
   
பொது தகவல்:
   
  பிரம்ம சாமுண்டீஸ்வரிக்கு "தில்லையம்மன்' என்ற பெயரும் உண்டு. இவள் நின்ற கோலத்தில் மேற்கு நோக்கி சாந்த சொரூபிணியாக அருளுகிறாள். இவளுக்கு தினமும் அபிஷேகம் நடைபெறும்.

தில்லைக்காளி உக்கிரத்துடன் கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் உள்ளாள். இப்படி செய்வதால் அம்மன் மகிழ்ந்து வேண்டும் வரம் தந்திடுவாள் என்பது நம்பிக்கை. ஞாயிற்றுக்கிழமை ராகு காலம், பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் இவளுக்கு சிறப்பு பூஜை நடக்கும். 

   

பிரார்த்தனை
   
  மகம் நட்சத்திரத்திற்கு இவள் அதிதேவதை என்பதால், அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற இவளுக்கு அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள்.  
   
நேர்த்திக்கடன்:
   
  பக்தர்கள் இவளுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, வெள்ளை வஸ்திரம் அணிவித்து, குங்கும அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள்.  
   
தலபெருமை:
   
  நான்குமுக அம்மன்: சிவனுக்கும், அம்பாளுக்கும் நடந்த நடனப்போட்டியில், சிவபெருமான் ஊர்த்துவ தாண்டவர் என்ற பெயரில், உக்கிரதாண்டவம் ஆடினார். ஒரு கட்டத்தில் தன் காலைத் தலையில் தூக்கி வைத்து ஆடிய சிவன், இவ்வாறே காளியால் செய்ய முடியுமா என கேட்க, பெண்மைக்குரிய நாணம் உந்தித்த்தள்ள காளியால் முடியாமல் போனது. இதனால் அவள் தோற்றாள்.

இதையடுத்து காளியின் கோபம் அதிகரித்தது. அவளது கோபத்தைப் போக்கும் வகையில், பிரம்மா அவளை வேதநாயகி எனப்புகழ்ந்து பாடி, நான்கு வேதங்களைக் குறிக்கும் வகையில், நான்கு முகங்களுடன் அருளுமாறு வேண்டினார். அதன்படி காளி, "பிரம்ம சாமுண்டீஸ்வரி' என்ற பெயரில் பிரம்மனைப்போல் நான்கு முகத்துடன் காட்சி தந்தாள். இவளுக்கு தனி சிலை வடிக்கப்பட்டுள்ளது.

   
  தல வரலாறு:
   
  சிவனுக்கும் சக்திக்கும் இடையே தங்களில் யார் சக்திமிக்கவர் என்று விவாதம் ஏற்பட்டது. பார்வதிதேவி,"சக்தி தான் பெரிது' என்று கோபத்துடன் வாதிட்டாள். சிவனும் சக்தியும் ஒன்று என்பதை உணர்த்த, அவளை உக்கிரகாளியாக மாறும்படி சிவன் சபித்து விட்டார். மனம்  வருந்திய பார்வதி சிவனிடம் சாப விமோசனம் கேட்டாள். அதற்கு சிவன்,""அரக்கர்களால் தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் துன்பம் ஏற்பட இருக்கிறது. நீ காளியாக இருந்து அவர்களை அழிக்க வேண்டும். பின்பு, தில்லையில்(சிதம்பரம்) என்னை நோக்கி தவம் இரு. நான் வியாக்ரபாதர்,பதஞ்சலி முனிவர்களது வேண்டுகோளின்படி தில்லையில் ஆனந்த நடனம் ஆடுவேன். அப்போது நீ சிவகாமி என்ற திருநாமத்துடன் என்னிடம் வந்து சேர்வாய்,''என்றார். அவ்வாறே அவள் செய்தாள். அவள் கோப சக்தியாக, "தில்லைக்காளி' என்ற பெயரில் அமர்ந்தாள். இவளை "எல்லைக்காளி' என்றும் சொல்வர். சிதம்பரத்தில் அருள் செய்யும் நடராஜரைத் தரிசிப்பவர்கள், ஊரின் எல்லையில் அருள்பாலிக்கும் தில்லைக்காளியையும் தரிசிக்கிறார்கள்.

   
சிறப்பம்சம்:
   
  அதிசயத்தின் அடிப்படையில்: பிரம்மனை போல் நான்கு முகத்துடன் தில்லை காளி தனி சன்னதியில் அருளுகிறாள். பிரகாரத்தில், நின்ற கோலத்தில் "வீணை வித்யாம்பிகை' என்ற பெயரில் சரஸ்வதியும், தெட்சிணாமூர்த்தி பெண் உருவத்தில் "கடம்பவன தக்ஷண ரூபிணி' என்ற பெயரிலும் அருளுகிறார்கள். கல்வியில் சிறந்து விளங்க வியாழக்கிழமைகளில் இவர்களுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்கிறார்கள். தெட்சிணாமூர்த்தியை பெண் வடிவில் இங்கு மட்டுமே தரிசிக்க முடியும். 

No comments:

Post a Comment