Thursday, 9 May 2013

ஸ்ரீ சிவன் ஆலயம், லாங்ஹார்ன், பென்சைல்வேனியா

ஆலய குறிப்பு : பென்சைல்வேனியாவின் லாங்ஹார்ன் பகுதியில் உள்ள ஸ்ரீ சிவன் ஆலயம் கேதர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. சின்மயா மிஷனால் ஏற்படுத்தப்பட்ட இவ்வலயம் 1992 ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி திறக்கப்பட்டதாகும். 

சாதாரண சிவன் கோயில்களை போல் அல்லாது முற்றிலும் மாறுபட்ட வடிவத்தில் சிவ பெருமான் இக்கோயிலில் காட்சி தருகிறார். தியானநிலையில் அமர்ந்த வடிவில் கேதரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாலயத்தில் அனைத்து இந்து திருவிழாக்களும் கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமின்றி முக்கிய தினங்களில் சிறப்பு பூஜைகளுடன் தியான வகுப்புக்களும் நடத்தப்படுகிறது.

அருள்மிகு சிவன் ஆலயம், லாஸ் ஏஞ்சல்ஸ்

ஆலய குறிப்பு : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் சின்மயா மிஷனால் நிறுவப்பட்டுள்ள சிவன் ஆலயம், இப்பகுதியில் புகழ்பெற்றதாக திகழ்கிறது. உணர்வு ரீதியாக ஆன்மிகம் மற்றும் ஞான உணர்வுகளை ஏற்படுத்துவதால் இவ்வாலயம் லாஸ் ஏஞ்சல்சின் காசி என்றே அழைக்கப்படுகிறது. இவ்வாலயத்தில் உள்ள சிவ லிங்கத்திற்கு 1997ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி சுவாமி சிதானந்தாவால் கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது.

1997ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி சுவாமி தேஜோமயானந்தாவால் இவ்வாலயத்தில் சிவ பெருமானின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவ்வாலயத்தில் தினசரி பூஜைகள், கலாச்சார, ஆன்மிக மற்றும் கல்வியியல் நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. சிவராத்திரி விழா இவ்வாலயத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி வழிபாடு நடத்துவர். 

ஸ்ரீ சிவன் ஆலயம், பிளோரிடா


ஆலய குறிப்பு : பிளோரிடாவில் உள்ள ஆர்லண்டோ பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சிவன் ஆலயம், சின்மயா மிஷனால் அமைக்கப்பட்டதாகும். இவ்வாலயம் இப்பகுதி மக்களால் தபோவனம் என்று அழைக்கப்படுகிறது. 1999ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி திறக்கப்பட்ட இவ்வாலயம் மும்பையில் உள்ள சந்தீபனி சாதனாலயத்தை போன்று அமைந்துள்ளது. பின்னர் இக்கோயிலில் ஸ்ரீ ஜகதீஸ்வரர் என்ற பெயரில் சிவ பெருமானின் சிலை நிறுவப்பட்டது. கைவல்யா என பெயரிடப்பட்டுள்ள இம்மையத்தில் மூர்த்தி ஸ்தாபனம் மற்றும் பிரண பிரதிஷ்டை சுவாமி தேஜோமயானந்தாவால் மேற்கொள்ளப்பட்டது.


முகவரி : Chinmaya Mission Orlando,
Kaivalya, 1221 Florida Road,

Casselberry, Florida 32707,

USA

தொலைப்பேசி : +1-407-699 7331
இணையதளம் : http://www.chinmayaorlando.org/

ஸ்ரீ ஷீரடி சாய்பாபா ஆலயம், தாலாஸ்,டெக்சாஸ்


ஆலய வரலாறு : ஷீரடி சாய்பாபாவின் சர்வ தர்ம வழிபாட்டை போதிக்கும் விதமாக அமைக்கப்பட்டதே டெக்சாஸ் மாகாணத்தின் தாலாஸ் பகுதியில் உள்ள ஸ்ரீ ஷீரடி சாய்பாபா ஆலயம் ஆகும். 2004ம் ஆண்டு நவம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் டெக்சாஸ் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா ஆலயம் திறக்கப்பட்டது. கணேச பூஜையுடன் துவங்கிய இந்த ஆலய துவக்க விழாவில் பிரண பிரதிஷ்டம், கணபதி ஹோமம், சாய் காயத்ரி ஹோமம் உள்ளிட்ட ஸ்ரீ சாய்பாபா பூஜைகளுடன் நடைபெற்றது. இவ்விழாவில் நூற்றுக்கணக்கான சாய் பக்தர்கள் கலந்து கொண்டனர். 

இஸ்லாமியர்களின் வழிபாட்டு கூடத்திற்கு அருகே தேவாலயமும் அதற்கு அடுத்த கட்டிடமாக சர்வ தர்ம கொள்கைகளை கற்பிக்கும் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா ஆலயமும் அமைந்துள்ளது இவ்வாலயத்தின் கூடுதல் தனிச் சிறப்பாகும். மேலும் துவராகாமயி என்றழைப்படும் சாய்பாபா ஆலயம் தற்போது அமைந்துள்ள இடம் முன்னதாக மசூதியாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. லாப நோக்கமற்ற அமைப்பாக செயல்பட்டு வரும் இவ்வாலயத்தில் யோகா, பஜனை உள்ளிட்ட வகுப்புக்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாலயத்தில் அனைத்து இந்து பண்டிகைகளும், விழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆலய முகவரி : Sri Shirdi Sai Baba Temple of DFW,
P.O.Box 797354, Dallas, TX 75379-7354
தொலைப்பேசி : (469)467-3388
இமெயில் : maildrop@shirdisaidallas.org
இணையதளம் : http://www.shirdisaidallas.org/index.php

ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி ஆலயம், டெக்சாஸ்


ஆலய வரலாறு : வேத பாரம்பரியத்தை வளர்ப்பதற்காக ஸ்ரீ திரிதந்தி சின்ன ஸ்ரீமன் நாராயண ராமானுஜ ஜீயர் சுவாமிகளால் டெக்சாசின் ஹோஸ்டன் நகரில் ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி ஆலயம் 2008ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இவ்வாலயம் பஞ்சரத்ராகம முறையின்படி அமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. வழிபாட்டு தலமாக விளங்கும் அஷ்டலக்ஷ்மி ஆலயத்தில் லக்ஷ்மி நாராயணர் உடன் லக்ஷ்மி தேவி, மகாலட்சுமி,தனலட்சுமி, தான்ய லட்சுமி,ராஜ்ய லட்சும், சந்தான லட்சுமி, ஜெய லட்சுமி, வீர லட்சுமி, தனலட்சுமி ஆகிய 8 வடிவங்களில் காட்சி அளிக்கிறாள். இவ்வாலயம் வழிபாட்டு தலமாக மட்டுமின்றி பண்டைய பாரம்பரிய வேத முறைகள், வழிபாட்டு முறைகள் ஆகியவற்றை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் இடமாகவும் விளங்குகிறது.

ஆலய அமைப்பு : அஷ்டலக்ஷ்மி ஆலயம், கலாச்சார அரங்குடன் சேர்த்து 3600 சதுரடி பரப்பளவில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் மைய அரங்கு சுமார் 300 பேர் வரை அமரும் திறன் கொண்டதாகும். இவ்வாலயத்தில் மத, சமூக மற்றும் குடும்ப நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. 

ஆலய நேரம் : காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் ஆலயம் திறந்துள்ளது. 

ஆலய முகவரி : Sri Ashtalakshmi Temple(JET USA Houston Chapter), 
10098 Synott Rd, Sugar Land, TX 77498. 
தொலைப்பேசி : (281) 498-2344
இமெயில் : alt@jetusahouston.org
இணையதளம் : http://www.ashtalakshmi.org

ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி சமேத வெங்கடேஷ்வர சுவாமி ஆலயம், லாஸ்ஏஞ்சல்ஸ்


ஆலய குறிப்பு : அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமைந்துள்ளது ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி சமேத வெங்கடேஷ்வர சுவாமி ஆலயம். இவ்வாலயத்தில் எட்டு தேவியர்களுடன் வெங்கடேஷப் பெருமாள் அருள்பாலிக்கிறார்.லாப நோக்கமற்ற அமைப்பாக செயல்பட்டு வரும் இவ்வாலயத்தில் புத்தாண்டு, சிவராத்திரி, பிரம்மோற்சவம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, ராமநவமி உள்ளிட்ட அனைத்து இந்துப் பண்டிகைகளும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 

ஆலய முகவரி : Sri Ashtalakshmi Sametha Venkateswara Swamy Temple,
8130, Laurel Canyon BLVD.North Hollywood, CA-91605.

தொலைப்பேசி : (818) 827-7927

இமெயில் : contact@ashtalakshmitemplela.org

இணையதளம் : www.ashtalakshmitemplela.org

இந்துக் கோயில், மின்னசொட்டா


ஆலய வரலாறு : மின்னசொட்டா பகுதியில் வழிபாட்டிற்காக இந்து ஆலயம் அமைக்க வேண்டும் என்பது அப்பகுதியில் வாழ்ந்தவர்களின் நீண்ட நாள் எண்ணமாக இருந்து வந்தது. 1970 களில் மின்னசொட்டா வாழ் இந்து குடும்பங்கள் வழிபாட்டின் மூலம் தங்களை ஒன்றிணைத்து கொள்ளவும், குழந்தைகளுக்கு மதம் மற்றும் கலாச்சாரத்தை தற்று தரும் இடம் தேவை முடிவு செய்து இவ்வாலயத்தை அமைத்தனர். 1979ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதியன்று சுமார் 10 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து இக்கோயிலை அமைத்தனர். இக்கோயிலில் ஸ்ரீ ராம பரிவார், ஸ்ரீ கணேசர், ஸ்ரீ கிருஷ்ணர், சரஸ்வரதி, லட்சுமி, மகாதேவர் உள்ளிட்ட திருவுருவப் படங்கள் நிறுவப்பட்டு இக்கோயில் திறப்பு விழா கண்டது. 


அவ்வாண்டு இறுதியில் பகவத் கீதை வகுப்புக்கள் துவங்கப்பட்டது. 1983ம் ஆண்டு முதன் முதலில் கணேசர் சிலை இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. சிறிய ஆலயமாக துவங்கப்பட்ட இவ்வாலயம் மெல்ல மெல்ல விரிவுபடுத்தப்பட்டு, தீபாவளி, ஹோலி உள்ளிட்ட அனைத்து பண்டிகைகளும் கொண்டாடப்பட்டது. 1999ம் ஆண்டு புதிய ஆலயம் கட்டுவதற்கான பூமி பூஜை போடப்பட்டது. 2001ம் ஆண்டு விஷ்ணுவிற்கு சுதர்சன ஹோமமும், 2002ல் சீதா ராமர் கல்யாணமும், 2003 ல் கிருஷ்ண மகோற்சவமும் நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 2006ம் ஆண்டு ஜூலை 2ம் தேதியன்று இவ்வாலயத்தின் முதல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அன்று முதல் நாள்‌தோறும் பூஜைகளும், வழிபாடுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. 2007ம் ஆண்டு ராம பரிவாரங்கள், ராதா-கிருஷ்ணர், மீனாட்சி, சிவன், சுப்ரமணியர், பாலாஜி, ஐயப்பன், சத்யநாராயணர், நவகிரகங்கள் உள்ளிட்ட தெய்வ சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

ஆலய முகவரி : Hindu Society of Minnesota
10530 Troy Lane North
Maple Grove, MN 55311

இணையதளம் : https://www.hindumandirmn.org/