Sunday 5 May 2013

சித்திரா பவுர்ணமி விரதம்


ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பவுர்ணமி என்கிற முழு நிலவு வருகின்ற நாளே சித்திரா பவுர்ணமி எனப்படுகிறது. இந்த நாள் தமிழகத்தில் மாபெரும் விழாவாக தேனி மாவட்டம் கோடி நாயக்கனூர் அருகிலுள்ள கோடாங்கி பட்டியிலும், காஞ்சீபுரம் சித்திரகுப்தர் கோவிலிலும், மாபெரும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. 

இந்த சுப நாளுக்கு பலவித கதைகள் பேசப்படுகின்றன. மனிதனுடைய வாழ்நாளை நிர்ணயம் செய்கின்ற எமதர்மராஜனின் அமைச்சராக இருக்கக்கூடிய சித்திர குப்தன் என்பவரின் பிறந்த நாளே சித்திரா பவுர்ணமி எனப்படுகிறது. 

அவருடைய கதை ஒரு படிப்பினை கூறுவதாகவும், குழந்தைகளின் ஆயுள் வளர்ச்சி கல்வி மேன்மை ஆகியவற்றை எடுத்துக் கூறுவதாகவும் அமைகிறது. இவர் பற்றிய ஒரு புராணக் கதையை நாம் படிப்பதாலும் உயர்ந்த பலன்களை அடையலாம். 

சித்திரகுப்தன் திருக்கதை............... ஒரு சமயம் இந்திரலோகத்தில் தேவேந்திரனின் மனைவி இந்திராணி தன் மாளிகை வாயிலில் நவதானியங்களை உலர்த்திக் கொண்டிருந்தாள். சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு பசு அதை நெருங்கி திண்ண தொடங்கியது. இதைக் கண்ட இந்திராணி அதை துடைப்பத்தால் அடித்து விட்டாள். 

இதனால், கடுமையான கோபம் கொண்ட பசு, "நான் கோமாதா என்றும் பார்க்காமல் துடைப்பத்தால் அடித்து விட்டதால் என் வயிற்றில் குழந்தைகள் பிறக்காமல் போகட்டும்'' என்று சாபம் விட்டு விட்டது. வீட்டிற்கு திரும்பிச் சென்ற பசு கவலையுடன் நின்று கொண்டிருந்தது. அதன் எஜமானி குழந்தை வரம் பெறுவதற்காக முனிவர் ஒருவரிடம் மாம்பழம் ஒன்று வாங்கி வந்திருந்தார். 

அதை சாப்பிட்ட பின் விதையையும், தோலையும் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டாள். அதை பசு சாப்பிட்டு விட்டது. பின் 10 மாதத்தில் எஜமானிக்கு ஒரு பெண் குழந்தையும், பசுவிற்கு ஆண் குழந்தையும் பிறந்தது. அந்த இரு குழந்தையும் எஜமானி அம்மாள் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தாள். அந்த ஆண் குழந்தைக்கு சித்திரகுப்தர் என்று பெயரிட்டாள். 

அவன் வளர்ந்து வரும் சூழ்நிலையில் அறிவில் சிறந்தவனாக விளங்கினான். குறிப்பாக கணக்குப் போடுவதில் கெட்டிக்காரணாக திகழ்ந்தான். அந்த சமயத்தில் எமதர்ம ராஜன் சபையில், பிறக்கும் ஜீவன்களின் பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் வேலைக்கு ஆள் தேவைப்பட்டது. 

வான் வழியாக உலா வந்த எமதர்மன் சித்திரகுப்தனின் நுண்ணறிவைக் கண்டு வியப்படைந்து தனக்கு உதவியாளராக கணக்கு எழுதும்படி கூறினார். சித்திரகுப்தன் அந்த பதிவியை ஏற்றுக்கொண்ட பிறகு கர்ணிகாம்பிகை, பிரபாவதி என்ற 2 பெண்களை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமியே பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. 

விரதத்தின் சிறப்பு............ முன்னொரு காலத்தில் அமராவதி என்ற பணக்கார பெண்மணி உலகத்தில் உள்ள எல்லாவிதமான தான தர்மங்களையும் செய்து வந்தாள். ஆனால் சித்திரா பவுர்ணமி விரதத்தை மட்டும் இந்த பிறவியில் செய்யாமல் விட்டு விட்டாள். 

அமராவதி காலமான பிறகு பாவ புண்ணிய கணக்குகளை படித்த எமதர்மராஜன் இத்தனை பூஜைகள் செய்து வந்த நீ, சித்திர குப்த விரதத்தை கடைப்பிடிக்காதது ஏன்? என்று கேட்டு, அதை விட்ட காரணத்தால் நீ நரகத்திற்கு போ என்று உத்தரவிட்டார். 

உடனே அமராவதி, தர்ம தேவையான எமதர்ம ராஜனிடம் எனக்கு 3 நாழிகை எனக்கு உயிர் கொடுத்தால் சித்திரகுப்தவிரதத்தை முடித்து விடுகிறேன் என்றாள். எமதர்மன் அதற்கு சம்மதம் கொடுக்க, காலமான அமராவதி உயிர் பிழைத்து எழுந்தாள். 

சித்திரா பவுர்ணமி நாளான அன்று ஆலயங்களிலும், இல்லங்களிலும் நடைபெறுகின்ற பூஜை விதிகளை போல அவளும் முறையாக சித்திரகுப்த பூஜைகளை செய்து அந்த விரதத்தின் பலனாக, சொர்க்க லோகத்துக்கு சென்றாள். அமராவதியின் கதையைக் கேட்ட இந்திராணி, சித்திரா பவுர்ணமி விரதத்தினைக் கடைப்பிடித்து அதன் பலனாக பசுவை அடித்த சாபத்தில் இருந்து விடுதலை பெற்று ஜெயந்தன் என்ற மகனையும், ஜெயந்தி என்ற மகளையும் பெற்றெடுத்தாள். 

அவருடைய பரம்பரை சிëத்திர குப்தர் பூஜையால் நன்கு வளர்ந்து அறிவுள்ள குழந்தைகளை பெறும் பயனே ஏற்பட்டது. சித்திரா பவுர்ணமி எனப்படுவது சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தன்று சைவ மக்களால் அனுஷ்டிக்கப்படும் ஒரு விரத நாளாகும். இந்நாளில் விரதமிருந்து கோயில்களிலும் ஏனைய புனித இடங்களிலும் கஞ்சி காய்ச்சி சித்திர புத்திரனார் கதை படித்து எல்லோருக்கும் கஞ்சி வார்ப்பர். 

இந்நாளில் முன்னோர் பொங்கல் வைத்துப் பூச்சொரிந்து குரவைக் கூத்தாடி வசந்த விழாவைக் கொண்டாடினர். காலப்போக்கில் இதை சிவனுடைய சிறப்பு விழாவாகவும் இறந்த அன்னையரின் பிதிர்த் தினமாகவும் கடைப்பிடிக்க ஆரம்பித்தனர். தாய் உயிருடன் இல்லாத ஆண்கள் அனைவரும் காலையில் எழுந்து நீர் நிலைகளுக்குச் சென்று நீராடி இறந்த தாயாரை நினைத்து தர்ப்பணம் பண்ணுவர். 

பின் வீட்டிற்கு வந்து, தாயார் படத்திற்கு உணவு படைத்து பின்னர் குடும்பத்துடன் உணவு உண்பர். பொதுவாக தாயார் இறந்த ஆண்டுத் திவசம் (முதலாம் ஆண்டு) முடியும் வரை இவ்விரதம் அனுஷ்டிக்கக் கூடாது என்பர். பெண்கள் தர்ப்பணம் பண்ணாது இவ்விரதம் அனுஷ்டிக்கக் கூடாது.

No comments:

Post a Comment