Tuesday 30 April 2013

பங்குனி உத்திரம்


ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விழாக்கள் நடத்துவதும் விரதம் இருப்பதும் வழக்கம். அதில் பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு அதிக மகத்துவம் உண்டு. இந்தத் திருநாளில்தான் மிக அதிகமான தெய்வத் திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன. 

12ஆவது மாதமான பங்குனியும், 12ஆவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புனிதநாள் பங்குனி உத்திரம். எண்ணிக்கையற்ற பலன்களைத்தரும் விரதங்களுள் பங்குனி உத்திர விரதமும் ஒன்று. இந்த விரதத்தை கல்யாண விரதம், திருமண விரதம் என்றும் கூறுவார்கள். உத்திர நட்சத்திர நாயகன் அதாவது அதிபதி சூரியன். 

அதே நாளில் நிறை நிலவும் பொருந்தும் போது சூரியன், சந்திரனால் இரட்டைச் சிறப்புகள் கிடைக்கின்றன. சிவபெருமானை கல்யாண சுந்தரமூர்த்தியாக பாவித்து அனுஷ்டிக்கும் விரதம் இது. சிவபெருமான் அன்னை பார்வதியோடு மணக்கோலத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மதுரையில் காட்சி தந்தருளிய திருநாள் இதுதான். 

அன்னை மீனாட்சியைத் திருமணம் செய்து மீனாட்சி சுந்தரேஸ்வரராகக் காட்சி தந்ததும் இந்நாளில்தான். ஆண்டு தோறும் மதுரையில் இத்திருமண விழாவை பங்குனி உத்திரத்தன்று சிறப்பாக நடத்துகின்றனர். சிவனின் தவத்தைக் கலைத்ததால் இறைவனின் நெற்றிக் கண்ணால் மன்மதன் எரிக்கப்பட்டான். ரதியின் வேண்டுதலால் மீண்டும் மன்மதன் உயிர் பெற்ற நாளும் இதுதான். 

முருகக்கடவுள் தெய்வானையை இந்த நாளில் தான் மணம் புரிந்துகொண்டார். அத்துடன் வள்ளியின் அவதார தினமும் இதுதான். பர்வத ராஜன் தவத்தால் பத்மத்தில் அவதரித்த பார்வதியை சிவபெருமான் கரம் பிடித்த நாளும் இதுவே. ஸ்ரீரங்க மன்னார் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடந்த நாளும் இதுதான். 

மகாலட்சுமி பங்குனி உத்திர விரதத்தை அனுசரித்துதான் ஸ்ரீமகா விஷ்ணுவின் மார்பில் உறையும் பாக்கியம் பெற்றாள். அத்துடன் மகாலட்சுமியின் அவதார நாளும் பங்குனி உத்திர நாள்தான்.  இந்நாளில் வைணவ ஆலயங்களில் மணக்கோலத்தில் தாயாரும் திருமாலும் காட்சி தருவார்கள். 

அன்று காஞ்சி வரதராஜர் ஆலயத்தில் ஸ்ரீபெருந்தேவித் தாயார் சந்நிதியில் ஸ்ரீதேவி, பூதேவி, மலையாள நாச்சியார், ஆண்டாள் மற்றும் பெருந்தேவித் தாயார் சகிதமாக ஸ்ரீவரதராஜர் காட்சி தருவார். காஞ்சியில் காமாட்சி ஏகாம்பரரேஸ்வரர் திருமண விழா நடைபெறும் போது, அதே மண்டபத்தில் ஏராளமானோர் திருமணம் செய்து கொள்வார்கள் மதுரையைப்போலவே தேவேந்திரன் இந்திராணி, நான்முகன் கலைவாணி திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் நடை பெற்றன. 

தசரத மைந்தர்கள் ஸ்ரீராமன் சீதை, லட்சுமணன் ஊர்மிளை, பரதன் மாண்டவி, சத்ருக்னன் ஸ்ருதகீர்த்தி திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் ஒரே மேடையில் மிதிலையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அழகுமிகு 27கன்னியர்களை சந்திரன் மனைவிகளாக ஏற்றுக் கொண்ட தினமும் இதுதான். 

இதே பங்குனித் திருநாளில்தான் வடநாட்டில் ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். பங்குனி உத்திரத்தன்று சில கோவில்களில் தீர்த்தவாரியும் நடைபெறும். அப்போது அந்த தலங்களில் உள்ள கடல், ஏரி, ஆறு, குளம், கிணறு போன்றவற்றில் புனித நீராடினால் புண்ணியம் கிடைக்கும். பங்குனி உத்திரத்தன்று கன்னிப் பெண்கள் கல்யாண விரதம் கடைப்பிடித்து, அருகே உள்ள ஆலயங்களில் திருமணக்கோல தெய்வங்களைத் தரிசித்தால் அவர்களுக்கும் கல்யாண வைபோகம் தான். 

அதுபோல திருமழப்பாடியில் நந்திக் கல்யாணம் கண்டால் முந்திக் கல்யாணம்தான். பங்குனி மாதத்தில் ஏற்றிய தீபத்தில் சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாகக் காட்சி தருகின்றனர். அதனால் அன்று திருவிளக்குப் பூஜை செய்து பாவங்களை விலக்கி, பகை அகற்றி புண்ணியம் பெறலாம். சபரிமலை ஐயப்பன் அவதார தினம் இது. காரைக்கால் அம்மையார் முக்தியடைந்த தினமும் பங்குனி உத்திரம்தான். 

அன்று தண்ணீர்ப் பந்தல் வைத்து நீர்மோர் தானம் தருவது மிகவும் புண்ணியம். 48 ஆண்டுகள் பங்குனி உத்திர விரதம் இருந்தவர்களின் மறுபிறவி தெய்வப் பிறவியாக அமையும்.  இந்தத் திருநாளில் லோபமுத்திரை அகத்திய முனிவரையும்; திருமாலின் புதல்விகளான அமிர்தவல்லியும் சுந்தரவல்லியும் தேவயானை, வள்ளியாகப் பிறவி எடுத்து முருகனையும் மணந்து கொண்டனர். பூரணா, பூஷ்கலா ஐயப்பனையும்; ரதி மன்மதனையும் கல்யாணம் செய்து கொண்டனர் என்று கந்தபுராணம் கூறுகிறது.

புத்தாண்டு அன்று காலையில் எதன் முகத்தில் விழிக்க வேண்டும்?


புது வருடப்பிறப்பு என்றாலே எல்லோருக்கும் மனதிற்குள் உற்சாகமும், சந்தோஷமும் பொங்கி எழும். அப்படிப்பட்ட புத்தாண்டு நாளில் நாம் அதிகாலையில் கண்விழித்தவுடன் முதலில் இறைவனின் திருவுருவப் படங்களைப் பார்ப்பது அந்த வருடத்தின் அனைத்து நாட்களிலும் நமக்கு நற்பலன்களைத் தரும் விதத்தில் அமையும். 

பொதுவாகவே காலையில் எழுந்தவுடன் நமது உள்ளங்கையைப் பார்த்து வழிபட வேண்டும் என்று பெரியவர்கள் கூறுவதுண்டு. இதற்கு காரணம் நமது விரல் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், கரங்களின் அடிப்பகுதியில் வீரத்தை வழங்கும் துர்க்கையும் குடி கொண்டிருப்பதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. 

ஆகவே கல்வி, செல்வம், வீரம் மூன்றுக்கும் அதிதேவதைகள் வீற்றிருக்கும் உள்ளங்கையை தரிசித்தால் அன்று முழுவதும் நல்ல சம்பவங்கள் நடைபெறும். மேலும் வலம்புரிச்சங்கு வைத்திருப்பவர்கள் அதில் காசுகளைப் பரப்பி வைத்து அதன் முகத்தில் விழிக்கலாம். 

கண்ணாடி, தண்ணீர், ஆலய கோபுரம் போன்றவற்றையும் எழுந்தவுடன் பார்ப்பது நல்லது. பூஜையறையில் கனிகளைப் பரப்பி வைத்து அவற்றின் முகத்தில் விழித்தாலும் கனிவான வாழ்க்கை அமையும். சான்றோர்களின் வாழ்த்துக்களைப் பெறுவதும் நல்லது.

ஹோமங்களில் போடும் பொருட்களால் கிடைக்கும் பலன்கள்


ஹோமங்களில் போடும் பொருட்களால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம். 

முக்கனிகளை இட்டால் - திருமணத் தடை அகலும். 
பச்சரிசியை இட்டால் - கடன் சுமை குறையும். 
தேன் ஊற்றினால் - பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். 
சர்க்கரையை இட்டால் - புகழ், கீர்த்தி அதிகரிக்கும். 
பால் ஊற்றினால் - வாகன யோகம் கிட்டும்.
நெய் இட்டால் - சுகபோகமான வாழ்க்கை அமையும். 
தயிர் இட்டால் - சொத்துக்கள் வாங்கும் அமைப்பு உருவாகும். 
அரசு சமித்துக் குச்சிகளை இட்டால் - பதவி வாய்ப்புகள் கிடைக்கும். அருகம்புல்லை இட்டால் - நீண்ட ஆயுள் விருத்தி ஏற்படும்.

சிவபூஜைக்கான மாதங்களும், மலர்களும்


சித்திரை-பலாசம், 
வைகாசி-புன்னை, 
ஆனி- வெள்ளெருக்கு, 
ஆடி-அரளி, 
ஆவணி-செண்பகம், 
புரட்டாசி- கொன்றை, 
ஐப்பசி-தும்பை, 
கார்த்திகை-கத்திரி, 
மார்கழி-பட்டி, 
தை- தாமரை, 
மாசி- நீலோத்பலம், 
பங்குனி-மல்லிகை. 

மாத பவுர்ணமிகளில் கீழே குறிப்பிடப்படுவனவற்றால் சிவபூஜை செய்தால் அனைத்து விருப்பங்களையும் அடையலாம். 

சித்திரை-மரிக்கொழுந்து. 
வைகாசி-சந்தனம், 
ஆனி-முக்கனிகள், 
ஆடி-பால், 
ஆவணி-நாட்டுச்சர்க்கரை, 
புரட்டாசி- அப்பம், 
ஐப்பசி-அன்னம், 
கார்த்திகை-தீபவரிசை, 
மார்கழி-நெய், 
தை-கருப்பஞ்சாறு, 
மாசி-நெய்யில் நனைந்த கம்பளம், 
பங்குனி-கெட்டித்தயிர். 

செல்வம் தரும் ராமநவமி வழிபாடு


நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம வென்றிண்டெழுத்தினால்

ஸ்ரீராமர் அவதாரம் மிகவும் புண்ணியமானது. ராமநாமம் மிகவும் புனிதமானது. இவ்வாறு ஸ்ரீராம நாமத்திற்கு மகிமையும், சக்தியும் இருப்பதால் ஸ்ரீராமாயணத்தை அனுதினமும் பாராயணம் செய்ய வேண்டும் என்று முன்னோர்கள் கூறுகிறார்கள்.

வால்மீகி மகரிஷியால் எழுதப்பட்ட இதிகாச ரத்ன ராமாயணத்தை தினந்தோறும் பாராயணம் செய்வோருக்கு ஆயுள், ஆரோக்கியம், சந்தானம், செல்வம் போன்ற அஷ்ட ஐசுவரியங்களும் தானாகவே சித்திக்கும். ஸ்ரீராம மந்திரத்திற்கு ஈடு இணை எதுவுமில்லை. "ராம் ராம்'' என்று உச்சரித்தால் அங்கே ராமர் எழுந்தருளி விடுவார்.

ராமாயணம் படிக்கும் இடத்தில் ஆஞ்சநேயர் அருவமாக எழுந்தருளுவார் என்பது ஐதீகம். இதனால்தான் ராமாயண காலசேட்ப இறுதியில் ஆஞ்சநேய உற்சவம் செய்து பூர்த்தி செய்வது சம்பிரதாயம். ஸ்ரீமந்நாராயணனின் அவதாரங்களில் ஸ்ரீராமாவதாரம் மிகவும் ஒப்பற்ற வைபவங்கள் மிக்கதாகும்.

ராமபிரான் சித்திரை மாதத்தில் அவதரித்தார் என்று கூறப்பட்டாலும், பெரும்பாலும் பங்குனி மாத வளர்பிறை நவமி திதியிலேயே ராமநவமி கொண்டாடபப்டுகிறது. அஷ்டமி, நவமி ஆகிய இரு திதி தேவதைகளும் தங்களை கெட்ட திதிகளாக எல்லாரும் எண்ணுவதாக மகாவிஷ்ணுவிடம் கூறி வருதப்பட்டன.

அவர்கள் மீது கருணைகொண்டு நவமி திதியில் ராமராகவும், அஷ்டமி திதியில் கிருஷ்ணராகவும் அவதரித்து திதி தேவதைகளின் மனக்குறையைப் போக்கினார் மகாவிஷ்ணு. முக்தி தரும் ஏழு தலங்களில் முதன்மையாகச் சொல்லப்படுவது அயோத்தி. சரயூ நதிக்கரையில் அமைந்த மீன் வடிவமுள்ள இந்த நகரில், இஷ்வாகு குலத்தில் 65-வது மன்னனாக அவதரித்தவர் ராமபிரான். தசரதனின் தாத்தாவின் பெயர் ரகு.

இவர் விஸ்வஜித் யாகம் நடத்தி தனது செல்வங்களையெல்லாம் தானமாக வழங்கினார். அதனால் ராமரின் வம்சம் ரகு வம்சம் என்றும் போற்றப்படும். ராமநவமியன்று ஸ்ரீராம ஜெயராம ஜெயஜெய ராமா' என்று 108 முறை மனமொன்றிச் சொன்னாலே போதும். எல்லையற்ற புண்ணியம் கிட்டும்.

ராமநவமியில் விரதமிருப்பதால் லட்சுமி கடாட்சம், வியாதிகள் அகலுதல், பகைவரும் நண்பராதல், தொலைந்த பொருட்கள் கிடைத்தல், பிள்ளைப்பேறு போன்றவற்றோடு எல்லா ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். `ஓம் நமோ நாராயண' என்னும் எட்டெழுத்து மந்திரத்திலுள்ள `ரா'வும் `ம'வும் இணைந்து உருவானதே `ராம' எனும் மந்திரம்.

இது ராமபிரான் பிறப்பதற்கு முன்பே உருவானதாகச் சொல்வார்கள். ராம நாமம் எல்லையற்ற ஆன்ம சக்தியை வழங்கக்கூடியது. `ரா' என வாய் திறந்து உச்சரிக்கும்போது நமது பாவங்கெல்லாம் வெளியேறி விடுகின்றன என்றும், `ம' என உச்சரிக்க நம் உதடுகள் மூடும்போது அந்தப் பாவங்கள் மீண்டும் வராமல் தடுக்கப்படுவதாகவும் சொல்வர்.

வால்மிகி முனிவர் ராமபிரான் பிறக்கும் முன்பே ராம சரிதத்தை எழுதி விட்டாராம். எதிர்காலத்தை முன்கூட்டியே அறியும் ஆற்றலை பிரம்ம தேவரிடம் பெற்ற இவர், மகாவிஷ்ணுவைத் தியானித்து அவரது அவதாரத்தை உணர்ந்து எழுதினார் என்பர்.

ஏழு வகை தாண்டவம்


சிவபெருமான் ஆடிய 7 வகை தாண்டவங்களும் அவை ஆடப்பட்ட இடங்களும் வருமாறு:- 

1. படைத்தல் செயலாகிய காளிகா தாண்டவம் (திருவாலங்காடு) 
2. காத்தலுக்குரிய கவுரி தாண்டவம் (திருப்பத்தூர்) 
3. காத்தல் செயலுக்கு சந்தியா தாண்டவம் (மதுரை) 
4. அழித்தலுக்குரிய சங்கார தாண்டவம் (ஆதாரமில்லை) 
5. மறைத்தலுக்கு திரிபுர தாண்டவம் (குற்றாலம்) 
6. அருளலுக்கு ஊர்த்தவ தாண்டவம் (திருநெல்வேலி) 
7. ஐந்தொழிலுக்கு ஆனந்த தாண்டவம் (சிதம்பரம) 

பஞ்சபூத தலங்கள்............ 

1. காஞ்சீபுரம் - பிருத்வி (நிலம்) மூலாதாரம் 
2. திருவானைக்காவல் - அப்பு (நீர்) சுவாதிஷ்டானம் 
3. திருவண்ணாமலை - தேயு (தீ) மணிபூராகம் 
4. காளஹஸ்தி - வாயு (காற்று) அனாகதம் 
5. சிதம்பரம் - ஆகாயம் (வான்) விசுத்தி

ஸ்ரீராமர் சக்கரம்


(ஞானியர்களால் ஆசீர்வதிக்கப் பட்ட ஸ்ரீராமர் சக்கரம் நம் அன்றாட பிரச்சினைகளுக்கு ஆரூடம் சொல்லுவதற்கு தக்க வழிகாட்டியாக அமைந்துள்ளது) 

1. இராமர்- வனவாசம் 
2. சீதை- துக்கம் 
3. லட்சுமணர்- காரியசித்தி 
4. விபீஷணர்- சர்வ லாபம் 
5. கும்பகர்ணன்- மரணம் 
6. இராவணன்- குலநாசம் 
7. அங்கதன்- ராஜ்யபிராப்தி 
8. சுக்ரீவன்- பந்துக்கள் வருகை 
9. இந்திரன்- தனயன் திருமணம் 
10. வாலி- காரியநாசம் 
11. நாரதர்- கலகம் 
12. குகன்- சிநேகிதர் வருகை 
13. அனுமன்- பகுலாபம் 
14. ஜாம்பவான்- தீர்க்க ஆயுள் 
15. கைகேயி- கலகம் 
16. பரதன்- சர்வகால சித்தி 

நமக்கு நடக்க வேண்டிய காரியத்தை மனதில் நினைத்துக் கொண்டு, ஸ்ரீராமநாமத்தை தியானித்து, குழந்தையைக் கொண்டு, எண்ணைத் தொடச் செய்து பலனை அறிந்து கொள்ளலாம்.

சித்திரா பவுர்ணமி பூஜை செய்யும் முறை


காலையில் எழுந்த உடன் குளித்து விட்டு சுத்தமான ஆடை அணிந்து கொண்டு பூஜை அறையை சுத்தம் செய்து ஒரு பலகை மேல் கலசம் வைத்து, அதற்கு முன்பு வண்ணக் கோலம் குழந்தை போன்று வரைந்து, அதற்கு கையில் புத்தகம், எழுத்தாணி இருப்பதும் போன்று இருக்க வேண்டும். 

பூஜைப் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டு உப்பைத் தவிர்த்து, பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் சேர்க்காமல் பகலில் உணவு உண்டு எளிய பூஜையை செய்ய வேண்டும். பூஜையின் போது, பசுத் தயிர் இல்லாமல் எருமைத் தயிர் மட்டும் சேர்க்க வேண்டும். 

ஒரு முறத்தில் அரிசி, காய்கறி, தாம்பூலம், முடிந்த அளவு காசுகள், எழுது பொருட்களான பேனா, பென்சில், நோட்டு புத்தகம், 7 வயதுக்குள்ளான ஒரு குழந்தைக்கு தானம் செய்ய வேண்டும். 

பூஜை சமயத்தில் வீட்டிலுள்ள குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும். வீட்டிலுள்ள பெரியவர்கள் நோய் தீர வேண்டும். ஆயுள் வளர வேண்டும் என்ற வேண்டுதலை செய்து அர்ச்சணையை செய்ய வேண்டும்.

எண்ணெய் தீபம்


* கணபதிக்கு தேங்காய் எண்ணெய் உகந்ததாகும். 

* முருகனுக்கு நெய் தீபம் உபயோகப்படுத்துவது நல்லது. 

* ருத்ராரி தேவதைக்கு இலுப்பை எண்ணெய் ஏற்றது. 

* தேவிக்கு ஐந்து வகை எண்ணெய் உபயோகிக்கலாம். 

* நாராயணனுக்கு நல்லெண்ணெய் ஏற்றதாகும். 

* மகாலட்சுமிக்கு நெய் உபயோகப்படுத்தலாம். 

* சர்வ தேவதைகளுக்கு நல்லெண்ணெய் உகந்தது. 

* குலதெய்வத்திற்கு இலுப்பை எண்ணெய், நெய் மற்றும் நல்லெண்ணெய் இவை மூன்றும் உபயோகிக்கலாம்.

இறை வணக்கத்துக்கே உடல்


பருந்து ஆகாயத்தில் ஏழெட்டு மைல் உயரத்தில் பறக்கிறது. அதற்கு கூர்மையான கண்கள் உண்டு. அதனால், வெகு துõரத்தில் இருந்து இறந்த உடல்களைக் காண முடியும். கீழே கிடக்கும் ஒரு மாமிசத் துண்டை கண்டுபிடித்து உண்பதற்காக இந்த தகுதி அதற்கு வழங்கப்பட்டிருக் கிறது. அதுபோலவே நமக்கு உயர்ந்த கல்வித்தகுதிகள் இருக்கலாம். அதன் நோக்கம் என்ன? வேலைக்கு போக வேண் டும். சம்பாதிக்க வேண்டும் போன்ற புலன் இன்பத்திற்காக மட்டுமே. விண்வெளிக்கலன்களின் உதவியால் நாம் மிக உயரத்தில் பறக்கலாம். அதன் நோக்கம் என்ன? மனம் உள்ளிட்ட புலன்களின் திருப்திக்காக, சுயநலத்திற்காக.

ஆகவே, இந்த துயரமிக்க ஜடநிலைக்கு காரணமாயிருப்பது இந்த உடல் என்பதை நாம் முதலில் உணர வேண்டும். அதே சமயத்தில் இந்த உடல் நிலையானதல்ல என்பதையும் அறிய வேண்டும். "நான், என் உடல், குடும்பம், சமூகம், நாடு' மற்றும் பலவற்றோடு நம்மை நாம் இனங்கண்டாலும் எவ்வளவு காலத்துக்கு இவையெல்லாம் நிலைத்து நிற்கும். அவை சாஸ்வதமானவை அல்ல.
இந்த உடல் பயனற்றது என்றாலும், அதைப் புறக்கணித்தும் விடக்கூடாது. இறையுணர்வை செயல்படுத்த நம் ஜடஉடலைப் பயன்படுத்த வேண்டும். அதற்கு தேவையான வகையில் நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும்.

ஆனால், அதனிடம் பற்றுக்கொள்ளக்கூடாது. இதற்கு யுத்த வைராக்கியம் என்று பெயர். உடலை உதாசீனம் செய்யக்கூடாது. நாம் ஒழுங்காக குளித்து உணவுண்டு உறங்க வேண்டும்.